ksrtc x
இந்தியா

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு... கர்நாடகாவில் போக்குவரத்துத் துறை உத்தரவு.!

கர்நாடகாவில் செயல்பட்டு வரும் நான்கு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கி கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

PT WEB

கர்நாடகாவில் அரசு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, மாதவிடாயின் போது ஊதியத்துடன் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை, காங்கிரஸ் அரசு கடந்த மாதம், 13ம் தேதி முதல் துவக்கியது. இந்த நிலையில், அரசின் இந்த உத்தரவுக்கு கர்நாடக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து, அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

ksrtc

இந்நிலையில், கர்நாடக போக்குவரத்து துறை பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளித்துள்ளது. இதுகுறித்து, கர்நாடக போக்குவரத்துக் கழகம் (KSRTC) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண் ஊழியர்களின் மன நலனை கருத்தில் கொண்டு, மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என அரசு பிறப்பித்த முந்தைய உத்தரவை தொடர்ந்து, கர்நாடக அரசின் நான்கு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும், ஓட்டுநர், நடத்துனர் மற்றும் ஊழியர்கள் என 18 முதல் 52 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு, மாதவிடாய் நேரத்தில் மாதத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும்.

விடுப்புகளை அங்கீகரிக்கும் அதிகாரிகளுக்கு, மாதவிடாய் விடுப்பையும் அங்கீகரிக்கும் அதிகாரம் கொடுக்கப்படுகிறது. மாதவிடாய் விடுப்புக்கு விண்ணப்பிக்க, மருத்துவ சான்றிதழ் தேவை இல்லை. மாதவிடாய் விடுப்பு மற்றும் தனிப்பட்ட விடுப்பை வருகை பதிவேட்டில் தனி, தனியாக பதிவு செய்ய வேண்டும். ஒரு மாதத்திற்கு உரிய மாதவிடாய் விடுப்பை, அடுத்த மாதம் சேர்த்து எடுக்க அனுமதி இல்லை” என அதில் கூறப்பட்டுள்ளது.