ரூ.1,200 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் அடையாளமாக காவிரித்தாய் சிலையை நிறுவ கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய கலாச்சாரத்தில் ஒருவரின் புகழை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு சிலை வடிக்கப்படுகிறது. தமிழகத்தில் உயர்ந்த சிலை திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில்கூட, குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சில நிறுவப்பட்டது. இந்தச் சிலை உலகத்திலேயே உயரமான சிலையாகும். உலகின் மிக உயரமான சிலையாக உருவாக்கப்பட்டுள்ள படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி ஆகும். இதற்கு சுமார் 3 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிலைக்கு இவ்வளோ செலவா? என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில் காவிரி ஆற்றின் சிறப்பை போற்றும் வகையில், காவிரித்தாயின் சிலையை நிறுவ கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையின் மீது 125 அடியில் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.1,200 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான செலவை கர்நாடக செய்யவில்லை என்றும், தனியார் நிறுவனம் ஒன்று ஏற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலை அமைப்பதற்கான இடத்தை அரசு வழங்கும், ஆனால் அதற்கான செலவை தனியார் நிறுவனம் ஏற்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.