இந்தியா

திப்பு சுல்தான் வரலாறு பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்படும்: எடியூரப்பா

webteam

திப்பு சுல்தானின் வரலாறு, பள்ளி பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மைசூரில் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை ஆட்சி நடத்தியவர் திப்பு சுல்தான். இவரது ஜெயந்தி, காங்கிரஸ் ஆட்சியின் போது ஒவ்வொரு வருடமும்  நவம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை பாஜகவும், இந்துத்துவா அமைப்புகளும் எதிர்த்தன. எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு, திப்பு ஜெயந்தி விழாவுக்கு தடை விதித்தது.

இந்நிலையில் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடியூரப்பா, திப்பு சுல்தானின் வரலாறு, பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்படும். அவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று நினைக்கவில்லை. அதனால் அவரது வரலாறு, பாடத் திட்டங்களில் இருந்தும் நீக்கப்படும்’ என்றார்.

சமீபத்தில், கர்நாடக பாஜக எம்எல்ஏ அப்பாச்சு ரஞ்சன், கல்வி அமைச்சர் சுரேஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில், திப்பு சுல்தான் குறித்த அனைத்து தகவல்களையும் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திப்பு பற்றி பாடப்புத்தகங்களில் உள்ள வரலாறு பொய்யானது. வருங்கால சந்ததியினரிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா, திப்புவின் வரலாறு பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.