கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நடந்திருப்பதாக திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.
திராவிடர் கழகம் வெளியிட்ட அறிக்கையில், 117 எம்.எல்.ஏக்கள் உள்ள தரப்பை அழைக்காமல் 104 எம்.எல்.ஏக்கள் உள்ள தரப்பை அழைத்தது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ஆளுநர் கொடுத்த 15 நாட்கள் அவகாசம் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கு போதுமான பலம் இல்லை எனத் தெளிவாக தெரிந்தும் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றது கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நிகழ்த்தப்பட்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தன் கண் முன்னே அரங்கேற்றப்படும் ஒரு அவல நாடகத்தை தடுக்க நீதிமன்றம் தவறவிட்டது என வேதனையுடன் சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
2019 பொது தேர்தலின் போது இதே நிலை ஏற்பட்டு விடுமோ என அஞ்சுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை தேர்தலே படுகொலை செய்வதா மக்களாட்சி என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த போலியான தேர்தல் முறையை ஒழித்து, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை ஏற்படுத்த வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.