கர்நாடகாவில் பாஜக கூட்டணியுடன் இணைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலையும் இணைந்தே சந்தித்தது. அப்போது முன்னாள் எம்பியும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. அவர் பாஜக கூட்டணியின் சார்பில் ஹசன் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், தேர்தல் நெருங்கும் சமயத்தில், பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இது, ரேவண்ணாவின் அரசியல் வாழ்க்கைக்கு ஓர் அடியாகவும் அமைந்தது. அவர் ஹசன் தொகுதியில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மறுபுறம், பாலியல் வன்புணர்வு தொடர்பாக அவர் மீது காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது. குறிப்பாக, பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அவர் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்பே ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். 35 நாட்களுக்குப் (மே 31, 2024) பிறகு அவர் நாடு திரும்பியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பத்திருந்தார். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அடுத்து உச்ச நீதிமன்றத்திலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று அவரை குற்றவாளி என உறுதி செய்துள்ளது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு வழக்குகள் ஒன்றில் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. ஹசன் மாவட்டம், ஹோலேநரசிபுராவில் உள்ள தனது குடும்பத்திற்குச் சொந்தமான கன்னிகாடா பண்ணை வீட்டில் வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், ரேவண்ணாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் பிரஜ்வல் ரேவண்ணா கதறி அழுததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 113 சாட்சிகளுடன் 1,632 பக்க குற்றப்பத்திரிகையை சிறப்பு விசாரணைக் குழு செப்டம்பர் 2024இல் தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில், பாதிக்கப்பட்ட பெண் 2021ஆம் ஆண்டில் இரண்டு முறை குற்றம் சாட்டப்பட்டவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தவிர, குற்றஞ்சாட்டப்பட்டவரே அதை வீடியோவாகவும் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, பிரஜ்வால் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.