இந்தியா

கூலிப்படையை ஏவி பெற்ற மகனை கொன்ற கொடூரம்.. தந்தை வாக்குமூலத்தால் அதிர்ச்சி.. என்ன காரணம்?

JananiGovindhan

பெற்ற மகனை கூலிப்படையை வைத்து கொன்ற தந்தையை கைது செய்திருக்கும் சம்பவம் கர்நாடகாவில் நடந்திருக்கிறது. கொலை செய்த கூலிப்படையினர் 6 பேரையும் ஹூப்ளி போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இது குறித்து பேசியுள்ள ஹூப்ளி போலிஸ் கமிஷ்னர் லாபு ராம், “நகைக்கடை வியாபாரியாக இருந்த அகில் என்ற 26 வயது இளைஞர் கடந்த டிசம்பர் 1ம் தேதி கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால் டிசம்பர் 3ம் தேதி அகிலை காணவில்லை என அவரது உறவினர் புகார் கொடுத்திருந்தார்.

அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்ததை அகிலின் குடும்பத்தினரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியிருக்கின்றனர். அதில், ஆறு பேரை கூலிக்கு ஆள் எடுத்து தனது மகனை தானே கொன்றதாக அகிலின் தந்தை பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சொந்த பிரச்னைதான் இந்த கொடூர கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

முதல் குற்றவாளியாக இருக்கும் அகிலின் தந்தை பாரத் மகாஜன்ஷேட், கூலிப்படையினரிடம் அகிலை சிக்க வைத்துவிட்டு வீட்டுக்கு தனியாக திரும்பியிருக்கிறார். மற்ற 6 பேரும் அகிலை கொன்று ஹூப்ளியில் உள்ள தேவகொப்பா என்ற பகுதியில் உள்ள கரும்பு தோப்பில் வைத்து உடலை எரித்திருக்கிறார்கள்" எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து கர்நாடக மருத்துவ அறிவியல் நிறுவனம் (KIMS), தடயவியல் பிரிவு நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் சம்பவம் குறித்த முக்கிய தகவல்களை சேகரித்திருக்கிறார்கள். இதன் மூலம் அகில் கொலையில் அவரது தந்தை, கூலிப்படையினர் தவிர மற்ற சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கியிருப்பதாகவும் லாபு ராம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பெற்ற மகனை தந்தையே ஆள் ஏவி கொன்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.