Vote counting
Vote counting File image
இந்தியா

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்? இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

PT WEB

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஆட்சியை பாரதிய ஜனதா தக்க வைக்குமா, காங்கிரஸ் கைப்பற்றுமா அல்லது தொங்கு சட்டசபையா என நண்பகலுக்குள் தெரிய வரும்.

Karnataka Election

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்திற்கு, கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடந்தது. அதில் 73.19 % வாக்குகள் பதிவாகின. அந்த வாக்குகளை எண்ணும் பணி, இன்று (மே 13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கையின் பெரும்பான்மை போக்கு தெரியவந்துவிடும். வாக்கு எண்ணிக்கைக்காக விரிவான ஏற்பாடுகள் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால், பாரதிய ஜனதாவோ அல்லது காங்கிரஸோ மீண்டும் ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த குமாரசாமி, இந்த முறை தங்கள் கட்சி 50 தொகுதிகளில் வெல்லும் என நம்புவதாகத் தெரிவித்தார். தனது நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி வைக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.

Karnataka Election

முதலமைச்சர் பதவி தனக்கு வழங்கப்படுவதுடன், அப்பணியில் வெளியிலிருந்து குறுக்கீடுகள் இருக்கக் கூடாது என்பதும் குமாரசாமியின் முக்கியமான நிபந்தனையாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, பாரதிய ஜனதா ஆதரவுடன் 2006-ஆம் ஆண்டும், காங்கிரஸ் ஆதரவுடன் 2018-ஆம் ஆண்டும் முதலமைச்சராக குமாரசாமி இருந்துள்ளார். இருப்பினும், பல்வேறு காரணங்களால் அவரது பதவிக்காலம் முழுமையாக நீடித்ததில்லை.

இதற்கிடையே, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை, பாரதிய ஜனதா கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 141 இடங்களில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் டிகே சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தொங்கு சட்டமன்றம் அமையாது என்றும் சிவகுமார் கூறியுள்ளார்.