இந்தியா

”ஆதார் இருந்தாதான் பிரசவம்” - கர்நாடகாவில் தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு நேரந்த துயரம்

JananiGovindhan

ஆதார் அடையாள அட்டை இல்லாததன் காரணமாக பிரசவத்துக்காகச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பியதால் அந்த பெண்ணும், அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளும் வீட்டில் இறந்த துயர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

தும்குரு மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற 30 வயது பெண். கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த புதன்கிழமையன்று மாலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அங்கு கஸ்தூரியிடம் ஆதார் மற்றும் மாநில அரசின் தாய் அட்டை இல்லாததால் அவருக்கு எந்த சிகிச்சையும் கொடுக்க முன்வராமல் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இதனையடுத்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள்.

ஆனால் கஸ்தூரியிடம் தனியார் மருத்துவமனையிலும் பிரசவம் பார்க்க பணம் இல்லாத காரணத்தால் வீட்டுக்கே திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், வியாழனன்று கஸ்தூரி இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்.

ஆனால், முறையான மருத்துவ சிகிச்சையின்றி பிரசவமானதால் கஸ்தூரிக்கு அதிகபடியான உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கஸ்தூரி இறந்திருக்கிறார். அவரை தொடர்ந்து பிறந்த இரட்டை குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.

இந்த சம்பவம் வெட்டவெளிச்சமாகவே கர்நாடக பாஜக அரசின் சுகாதாரத்துறை குறித்து அம்மாநில எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் கடுமையான விமர்சித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து மாநில சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்திய பின்னர் உயிரிழந்த கஸ்தூரி சிகிச்சைக்காக வந்த போது பணியில் இருந்த மருத்துவர் உஷா மற்றும் 3 செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும் முன்னாள் கர்நாடக முதல்வருமான எச்.டி.குமாரசாமி, “அரசியலிலும், தேர்தல் மற்றும் பிரசாரங்களிலும் மூழ்கி கிடக்கும் கர்நாடக பாஜக அரசின் நிர்வாகம் குறித்து சற்று முன்புதான் பதிவிட்டிருந்தேன்.

ஆனால் தும்கூரில் நடந்த பயங்கமான நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் கர்நாடகாவையே உலுக்கச் செய்திருக்கிறது.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, சுகாதார அமைச்சர் சுதாகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்