கர்நாடக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் எனக் குற்றம்சாட்டி காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கு காரணம் பாரதிய ஜனதா கட்சிதான் என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதாகவும் புகார் கூறி தொடர்ந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
எனவே, அவையில் குழப்பம் தொடர்ந்ததால் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவையை முதலில் 12 மணி வரை ஒத்தி வைத்தார். தொடர்ந்து, 12 மணிக்குப் பிறகு அவை கூடிய நிலையில், மீண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டார்.
அதைத் தொடர்ந்து மாநிலங்களவையை மதியம் 2 மணி வரை ஒத்தி வைத்து ஹரிவன்ஷ் உத்தரவிட்டார். மீண்டும் 2 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று மக்களவையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.