இந்தியா

கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடிதடி: போலீசார் வழக்குப்பதிவு

கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடிதடி: போலீசார் வழக்குப்பதிவு

webteam

பெங்களூரு சொகுசு விடுதியில் தன்னை எம்எல்ஏ கணேஷ் தாக்கியதாக மற்றொரு எம்எல்ஏ அனந்த் சிங் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் கணேஷ் மீது கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சங்கர், நாகேஷ் என்ற இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், ரமேஷ் ஜர்கிஹோலி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் மற்றும் மகேஷ் குமதஹல்லி ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இது மஜத தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனிடையே, கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுக்கு தாவ உள்ளதாகவும், அவர்களிடம் ரிசார்ட்டில் வைத்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. 

இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஒன்றாக தங்கவைக்கப்பட்டனர். அப்போது, சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த மோதலின் போது, ஆனந்த் சிங் என்ற எம்எல்ஏவை, கே.என்.கணேஷ் என்ற எம்எல்ஏ தாக்கியதாகவும் அதில் காயமடைந்த ஆனந்த் சிங் பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், நெஞ்சுவலி காரணமாகவே ஆனந்த் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சுரேஷ் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ கணேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.