பி.ஆர்.பாட்டீல், சித்தராமையா எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா | சித்தராமையாவை முதல்வர் ஆக்கிய விவகாரம்.. கசிந்த வீடியோ.. விளக்கமளித்த காங். MLA!

இரண்டு ஆண்டுகள் சித்தராமையா ஆட்சி கழிந்த நிலையில், தற்போது முதல்வர் பற்றிய பேச்சு மீண்டும் அங்கு புயலைக் கிளப்பியுள்ளது.

Prakash J

கர்நாடகா மாநிலத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து முதல்வரைத் தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. பின்னர், ஒருவழியாக சித்தராமையா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சித்தராமையா ஆட்சி கழிந்த நிலையில், தற்போது முதல்வர் பற்றிய பேச்சு மீண்டும் அங்கு புயலைக் கிளப்பியுள்ளது.

டி.கே.சிவகுமார், சித்தராமையா

இந்தச் சலசலப்பைச் சரி செய்ய சித்தராமையா தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.வான பி.ஆர்.பாட்டீல் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது அவருக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ”சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது. சோனியா காந்தியிடம் நான்தான் சித்தராமையாவை அறிமுகம் செய்தேன். அவருக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்தது. அதனால் முதலமைச்சராகிவிட்டார். எனக்கு காட்ஃபாதர் அல்லது கடவுள் இல்லை. நான், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை சந்தித்து, சொல்ல வேண்டிய அனைத்தையும் சொன்னேன். அவர்கள் பொறுமையாக என் பேச்சைக் கேட்டார்கள், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கர்நாடகாவில் தற்போதைக்கு முதலமைச்சர் மாற்றம் குறித்து ஆலோசிக்கவில்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறிய நிலையில், காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ. பேசும் காட்சிகள் வெளியாகி காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக பி.ஆர்.பாட்டீல் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், ”மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் எனது அறிக்கை திரிக்கப்பட்டு, என்னை அவமதிப்பது சரியல்ல. நான் கிருஷ்ணராஜ்பேட்டையில் இருந்தபோது, ​​நெருங்கிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சித்தராமையாவின் பற்றிய பேச்சு வந்தது. சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்து முதல்வரானார் என்பது போன்ற சில விஷயங்களை நான் சொன்னேன். ஆனால் நான் சித்தராமையாவை சோனியா காந்தியைச் சந்திக்க வைத்தேன் என்று கூறுவது முற்றிலும் தவறு. சோனியா காந்தியைச் சந்தித்தபோது நான் அவருடன் சென்றிருந்தேன். அவர் 'இந்த முறை அவரைச் சந்திக்க வேண்டாம்' என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் நான் வலியுறுத்தினேன்.

பி.ஆர்.பாட்டீல், சித்தராமையா

பின்னர் அவர் அவரைச் சந்தித்தார். சித்தராமையா ஒரு வெகுஜனத் தலைவர். அவரை முதலமைச்சராக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. சிலர் வேண்டுமென்றே எங்கள் இருவருக்கும் இடையிலான உறவைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள். அவரது தலைமையில் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேடிஎஸ்ஸை விட்டு காங்கிரசில் இணைந்தனர். காங்கிரஸ் அவரை முதலமைச்சராக்கியது, நாங்கள் சொன்னதால் அல்ல, அவருக்குக் கிடைத்த மக்கள் ஆதரவின் காரணமாகவே. சித்தராமையாவுடனான எனது உறவைக் கெடுக்க சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்வது சரியல்ல” என விளக்கம் அளித்துள்ளார்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சித்தராமையாவின் தலைமையில் ஜேடிஎஸ்ஸிலிருந்து காங்கிரஸுக்கு மாறிய சட்டமன்ற உறுப்பினர்களில் பி.ஆர்.பாட்டீலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தராமையாவுக்கு நெருக்கமானவர் என்று அறியப்படும் பி.ஆர்.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அல்லது கட்சியின் முக்கியப் பங்கு கிடைக்காததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

டி.கே.சிவகுமார், சித்தராமையா

முன்னதாக, துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆதரவாகப் பேசிய எம்.எல்.ஏ.க்களில் இக்பால் உசேனும் ஒருவர். அவர், “காங்கிரஸ் கட்சியின் 138 எம்.எல்.ஏ.க்களில் 100 பேர் துணை முதல்வருக்கு ஆதரவளிக்கின்றனர். உயர்மட்டக் குழு முதலமைச்சரை மாற்றவில்லை என்றால், கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் போகலாம் என்று அவர் எச்சரித்திருந்தார்.