அண்டை மாநிலமான கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அவருடைய அமைச்சரவையில், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே.என்.ராஜண்ணா கூட்டுறவுத் துறை அமைச்சராக அங்கம் வகித்தார். தவிர, இவர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்தார். அதிலும், 2024 மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக ராகுல் காந்தி கூறியிருந்தார். எனினும், அவருடைய குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இந்த முறைகேடுகள் நடைபெற்றது என்பது உண்மைதான். அவை, நம் கண் முன்னாலேயே நடைபெற்றுள்ளன. இதற்கு, நாம் வெட்கப்பட வேண்டும்.கே.என்.ராஜண்ணா
இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் தங்கள் கண்முன் நடந்த அந்தத் தவறை தடுக்க முடியாதது வெட்கக்கேடு என்று கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கே.என்.ராஜண்ணா பேசியிருந்தார். வாக்காளர் பட்டியல் வெளியானவுடன் சரிபார்க்காமல் இப்போது அது பற்றிப் பேசி என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த முறைகேடுகள் நடைபெற்றது என்பது உண்மைதான். அவை, நம் கண் முன்னாலேயே நடைபெற்றுள்ளன. இதற்கு, நாம் வெட்கப்பட வேண்டும். அப்போது நாம் நடவடிக்கை எடுக்கவில்லை, எதிர்காலத்தில் நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் எப்போது தயாரிக்கப்பட்டது? அது நம்முடைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்தான். அந்த நேரத்தில், எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்களா? இதுபோன்ற விஷயங்களில் சாதாரணமான கருத்துக்கள் சங்கடமான உண்மைகளுக்கு கதவைத் திறக்கும். வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும்போது, பின்னர் அமைதியாக இருந்து பிரச்னைகளை எழுப்புவதைவிட, சரியான நேரத்தில் ஆட்சேபனைகளை எழுப்புவது தலைவர்களின் கடமை” என கருத்து தெரிவித்தார்.
ஏற்கெனவே ராகுல் காந்தியின் கூற்றுகள் தொடர்பாக அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அமைச்சர் கே.என்.ராஜண்ணாவின் கருத்து கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியது. அதேநேரத்தில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இந்தக் கூற்றுக்களை கடுமையாக மறுத்தார். மேலும் கட்சியின் கடந்தகாலப் பதிவைப் பாதுகாத்து, ராஜண்ணாவின் அறிக்கையை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம்சாட்டினார். மறுபக்கம், ராஜண்ணாவின் கருத்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, காங்கிரஸ் உயர்மட்டக் குழு, முதல்வர் சித்தராமையாவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியது. ஆனால் அதற்கு முன் ராஜண்ணாவே பதவியிலிருந்து விலகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமாரை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என ராஜண்ணா வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், அமைச்சர் ராஜண்ணாவின் ராஜினாமா தொடர்பாக நேற்று நடைபெற்ற அவையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் அதை ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு எதிர்க்கட்சியான பாஜக அரசாங்கத்தை வலியுறுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, ”ராஜண்ணா இனி அமைச்சராக இல்லாவிட்டால், அவர் கருவூல பெஞ்சுகளில் அமரக்கூடாது” என்று வாதிட்டார். மேலும் அவரது தற்போதைய நிலையை தெரிவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.