சித்தராமையா
சித்தராமையா Twitter
இந்தியா

“கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை ரத்து” - கர்நாடக முதல்வர் சித்தராமையா

webteam

2022-ம் ஆண்டு கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதற்குப்பின் அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதையடுத்து, தற்போது ஹிஜாப் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் சித்தராமையா.

நேற்றைய தினம் நிகழ்ச்சியொன்றில் பேசிய சித்தராமையா, “அனைவருக்கும் அனைத்தும் என்று பிரதமர் மோடி கூறுவது போலியானது. மக்களையும் சமுதாயத்தையும் உடை மற்றும் சாதிரீதியாக பாரதிய ஜனதா பிளவுபடுத்துகிறது.

Hijab

ஹிஜாப் தடையை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டிருக்கிறோம். உடை மற்றும் உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதை ஏன் எதிர்க்க வேண்டும்? அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? வாக்குகளைப் பெறுவதற்காக இவற்றில் அரசியல் செய்யக்கூடாது

உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ உடுத்துங்கள்; என்ன பிடிக்கிறதோ சாப்பிடுங்கள்! என் விருப்பம் என் தேர்வு; உங்கள் விருப்பம் உங்கள் தேர்வு. நான் வேஷ்டியும் குர்தாவும் அணிகிறேன். நீங்கள் பேண்ட் - ஷர்ட் அணிகின்றீர்கள். இதிலென்ன தவறுள்ளது? பாஜக, உணவு - உடை - சாதி போன்றவற்றின்மூலம் மக்களை பிரிக்க நினைக்கிறது. நான் ஹிஜாப் தடையை திரும்பப்பெற உத்தவிட்டுள்ளேன். நாளை (இன்றை குறிப்பிட்டு) உத்தரவிட்டுள்ளேன்” என்றார். X வலைதளத்திலும் இதுகுறித்து பதிவிட்டுள்ளார் அவர்.

சித்தராமையாவின் அறிவிப்பை விமர்சித்துள்ள பாரதிய ஜனதா கட்சி,கர்நாடகாவில் மதரீதியான நஞ்சை அவர் விதைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடக பாரதிய ஜனதாவின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “பள்ளி, கல்லூரிகளில் மாணாக்கர் அனைவரும் சமம் என்பதற்காகவே சீருடை கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது. தற்போது கர்நாடக முதல்வரின் இந்த நடவடிக்கையால், மாணாக்கரின் மனதில் சீருடை தொடர்பான வேறுபாட்டை சித்தராமையா உருவாக்குகிறார்” என விமர்சித்துள்ளது.