கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமியும், துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வராவும் பதவியேற்று கொண்டனர். அமைச்சர் பதவிகளை பங்கிட்டு கொள்வதில் இருகட்சிகள் இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது இலாகா ஒதுக்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி உள்துறை, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட 22 துறைகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போல் நிதித்துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட12 துறைகள் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. பெங்களூருவில் உள்ள கர்நாடக ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகலில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 9 பேர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மகேஷ் உட்பட 22 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற பெரும் பங்காற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு முக்கிய துறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் உத்தரப்பிரதேசத்துக்கு வெளியே மற்றொரு மாநில அரசில் பகுஜன் சமாஜ் கட்சி இடம்பெறுவது இதுவே முதல் முறை. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்க உள்ளார்.