இந்தியா

கர்நாடக தேர்தலின் வெற்றி கோலி அணியின் வெற்றி போல் உள்ளது - ப.சிதம்பரம்

கர்நாடக தேர்தலின் வெற்றி கோலி அணியின் வெற்றி போல் உள்ளது - ப.சிதம்பரம்

webteam

கர்நாடக இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியில் இருந்து கூட்டணியின் பலனை உணர வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

கர்நாடகாவில் மூன்று மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. அதேபோல் இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் படி, பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் எல். சிவராமே கவுடா சுமார் மூன்றே கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் சித்தராமய்யாவை தோற்கடித்தார். ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடி்யூரப்பாவின் மகன் ராகவேந்திரா சுமார் 51ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

அதேபோல் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் குமாரசாமி, ராம்நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி சார்பில், குமாரசாமியின் மனைவி அனிதா போட்‌டியிட்டார். இதேபோல் ஜம்கண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அனிதா குமாரசாமி வெற்றி பெற்றார். இதேபோல் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆனந்த் சித்து யமகவுடா வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியில் இருந்து கூட்டணியின் பலனை உணர வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், ''கர்நாடக இடைத்தேர்தல்களில் 4-1 என கிடைத்த வெற்றி விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இதில் கற்க வேண்டிய பாடம், கூட்டணி பலன் தந்துள்ளது'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.