கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கர்நாடக சட்டப்பேரவையின் 15 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன. இதில் குறைந்தபட்சம் ஆறு தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால்தான் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்கும் என்பதால், இம்முடிவு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் ஆட்சி கவிழக் காரணமான அக்கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவற்றில் 15 தொகுதிகளில் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 67 சதவிகித வாக்குகள் பதிவாகின. இவை நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 15 தொகுதிகளில் குறைந்தபட்சம் ஆறு தொகுதிகளிலாவது வென்றால்தான் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்கும் என்று நிலை உள்ளது.