மாரடைப்பால் உயிரிழந்த புதுமாப்பிள்ளை pt desk
இந்தியா

கர்நாடகா | தாலி கட்டிய சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த புதுமாப்பிள்ளை – அதிர்ச்சியில் மணமகள்

கர்நாடகாவில் தாலி கட்டிய சிறிது நேரத்தில் மாரடைப்பால் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகததை ஏற்படுத்தியது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவருக்கும், பார்த்தனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் பேசி முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களது திருமணம் ஜமகண்டியில் உள்ள நந்திகேஷ்வரா மண்டபத்தில் நேற்று நடந்தது. அப்போது மணமகன் பிரவீன், மணமகளுக்கு தாலி கட்டினார்.

இதனைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மணமக்கள் மேடையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், திடீரென்று பிரவீனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி கீழே சுருண்டு விழுந்துள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் பிரவீனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைக்கேட்ட பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், மணமகள் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மணமகள் கதறி அழுதார். ஆயிரம் கனவுகளுடன் திருமண பந்தத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே தனது வாழ்க்கைத் துணையை இழந்ததை எண்ணி, எண்ணி மணமகள் கதறி துடித்தார். அது காண்போரின் கண்களை குளமாக்கியது.

Death

வாழ வேண்டிய இளம் வயதில் தங்களை பரிதவிக்க விட்டுச் சென்றுவிட்டானே எனக்கூறி பிரவீன் பெற்றோரும், குடும்பத்தினரும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.