ஜனார்த்தன ரெட்டி எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா | சட்டவிரோத சுரங்க வழக்கில் சிறைத் தண்டனை.. பாஜக எம்எல்ஏ தகுதிநீக்கம்!

கர்நாடக பாஜக எம்எல்ஏ ஜி ஜனார்த்தன் ரெட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

கர்நாடகாவின் கங்காவதி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர், ஜனார்த்தன் ரெட்டி. அவர் நிர்வகித்த ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தால் சட்டவிரோதமாக இரும்புத் தாது வெட்டியெடுத்த வழக்கில் ஜனார்த்தன் ரெட்டி மற்றும் மூன்று பேருக்கு சமீபத்தில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்த நிலையில், சட்டவிரோத சுரங்க வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஜனார்த்தன ரெட்டியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது என கர்நாடக சட்டமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, விடுவிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் ஜனார்த்தன ரெட்டி தேர்தலில் போட்டியிட முடியாது. இதன்மூலம், கர்நாடக சட்டமன்றத்தின் ஒரு இடம் காலியாகியுள்ளது.

ஜனார்த்தன ரெட்டி

முன்னதாக, பல்லாரியில் பாஜகவின் முக்கியப் பிரமுகராக இருந்த ஜனார்த்தன ரெட்டி, 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா (கேஆர்பிபி) என்ற கட்சியைத் தொடங்கினார். இதன்மூலம் பாஜகவுடனான தனது இருபது ஆண்டுகால தொடர்பை முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர் தனது புதிய கட்சியின் கீழ் கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ரெட்டி கேஆர்பிபியை பாஜகவுடன் இணைத்து முறையாக மீண்டும் கட்சியில் இணைந்தார்.