இந்தியா

பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட் - சிக்குவாரா நித்தியானந்தா?

சங்கீதா

சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா மீதான பாலியல் வழக்கில், கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வரமுடியாத கைதுவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தில் இருந்தப் பெண் சிஷ்யைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, நித்யானந்தா மீது அவருடைய முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராமநகர் மூன்றாவது மாவட்ட கூடுதல் மற்றும் செஷன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்பு நித்யானந்தா சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தா, இதுதொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றிருந்தார்.

பின்னர் நாட்டைவிட்டு நித்யானந்தா தப்பிவிட்டதால் அவரின் ஜாமீனை ரத்துசெய்யக்கோரி, மீண்டும் லெனின் கருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் கடந்த 2020-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறி, கைலாசா என்று அழைக்கப்படும் நாட்டை உருவாக்கி தனது ஆசிரமத்தை நிறுவியதாக அவரால் நம்பவைக்கப்பட்டு வருகிறது. இந்த இடம் எங்கே இருங்கிறது என்று இதுவரை யாராலும் அறியப்படவில்லை. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை பிடதி ஆசிரமத்துக்கு சம்மன் அனுப்பியும் நித்தியானந்தா ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராமநகர் மாவட்ட நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளியேவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நித்தியானந்தா கைதுசெய்யப்படுவரா, மாட்டரா என்று குழப்பம் நிலவி வருகிறது.