karnataka assembly x page
இந்தியா

கர்நாடகா | சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள்!

கர்நாடக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு ஓய்வெடுக்க பிரத்யேக சோஃபாக்கள் வாடகைக்கு எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Prakash J

அண்டை மாநிலமான கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் உள்ளார். இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு ஓய்வெடுக்க பிரத்யேக சோஃபாக்கள் வாடகைக்கு எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க வெளியில் செல்வதால் அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்காத சூழல் உள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த நிலையில், சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள் வாங்க சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும், அவருடைய இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

karnataka assembly

மேலும், சாய்வு நாற்காலிகளுடன் கூடுதலாக, சட்டமன்ற செயலகம் பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை புத்தகக் கண்காட்சியை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்காட்சியில் புத்தக வெளியீடுகள், குழு விவாதங்கள் மற்றும் 150 அரங்குகள் இடம்பெறும் எனவும், 25 அரங்குகள் அரசுத் துறைகள் மற்றும் கல்விக்கூடங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், மீதமுள்ள அரங்குகள் தனியார் பதிப்பகங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நூலகங்களின் பங்கேற்பையும் ஆதரவையும் ஊக்குவிக்கும் வகையில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கண்காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்குமாறு சபாநாயகர் காதர் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.2 லட்சம் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

karnataka assembly

முன்னதாக, சட்டமன்றத்திற்குள் இலவச காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்குவது போன்ற முந்தைய முயற்சிகள் ஏற்கெனவே வருகையை அதிகரிப்பதில் வெற்றி பெற்றுள்ளன என அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களின் வருகையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சட்டமன்றத்திற்குள் வாசிப்பு கலாசாரத்தையும் அறிவுசார் ஈடுபாட்டையும் வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.