செய்தியாளர்: மகேஷ்வரன்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மலை மாதேஸ்வர வன உயிரின சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் புலிகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வன சரணாலயத்தை கர்நாடக மாநிலத்தின் 6 வது புலிகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த வன சரணாலயம் பகுதியில் ஒரு தாய் மற்றும் அதன் 4 குட்டி புலிகள் என ஒரே நேரத்தில் 5 புலிகள் உயிரிழந்திருப்பது வன உயிரின ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புலிகளின் இறப்பிற்கான காரணம் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.