இந்தியா

கர்நாடகா: தெருவுக்கு கோட்சே பெயரில் வைக்கப்பட்ட பலகை அகற்றம்! வழக்குப்பதிவு!

ச. முத்துகிருஷ்ணன்

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் மர்ம நபர்கள் நிறுவிச் சென்ற நாதுராம் கோட்சேவின் பெயரைக் கொண்ட சாலைப் பலகை அகற்றப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலைக்கு மகாத்மா காந்தியை கொலைசெய்த குற்றவாளி நாதுராம் கோட்சேவின் பெயரை கொண்ட பலகை ஒன்று வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உள்ளூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

'பதுகிரி நாதுராம் கோட்சே சாலை' என்ற பலகையை உள்ளாட்சி அதிகாரிகள் அகற்றிவிட்டு, போர்டு வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இருப்பினும் அந்த பெயர்பலகையின் புகைப்படம் ஆன்லைனில் பரவலாகப் பரப்பப்பட்டது. கர்நாடக எரிசக்தி அமைச்சர் சுனில் குமாரின் தொகுதியில் உள்ள போலோ கிராம பஞ்சாயத்தில் சாலையோரத்தில் இந்த பலகை நிறுவப்பட்டது.

இந்த போர்டு அரசாலோ அல்லது ஊராட்சி அதிகாரிகளாலோ நிறுவப்படவில்லை என்று கூறிய அமைச்சர் சுனில் குமார் சில விஷமிகள் இந்த செயலை செய்துள்ளதாக தெரிவித்தார்.