இந்தியா

'ரோடு சரியில்லை' என கூறிய இளைஞர் - 'பளார்' என அறைவிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ

ஜா. ஜாக்சன் சிங்

தனது கிராமத்தில் சாலையை சீர்செய்யுமாறு கோரிக்கை விடுத்த இளைஞரை காங்கிரஸ் எம்எல்ஏ அறைந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடாகாவில் உள்ள பவகடா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் வெங்கடரமணப்பா. இவர் அப்பகுதியில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் ஏறுவதற்காக சென்றார்.

அப்போது அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர், தனது கிராமத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ வெங்கடரமணப்பா, அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த இளைஞர், "நீங்கள்தானே எங்கள் தொகுதி எம்எல்ஏ. உங்களிடம் பிரச்னையை கூறாமல் வேறு யாரிடம் கூறுவது? குறைகளை தெரிவித்தால் அடிப்பீர்களா? எனக் கேள்வியெழுப்பினார். இதனைத் தொடர்ந்து, அவரை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏவின் செயலுக்கு கர்நாடக பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு அதற்கு கீழே, "தொகுதி பிரச்னையை கூறிய இளைஞரை காங்கிரஸ் எம்எல்ஏ கன்னத்தில் அறைகிறார். மக்கள் பிரச்னைகளை காங்கிரஸார் அணுகும் விதம் இப்படிதான் இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.