இந்தியா

”ராஜினாமா பேச்சுக்கே இடமில்லை”-கான்ட்ராக்டர் தற்கொலையில் கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

ஜா. ஜாக்சன் சிங்

கர்நாடகாவில் கான்ட்ராக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்காக தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என அமைச்சர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

கர்நாடகா மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல் (40). அரசுத் துறைகள் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளில் கான்ட்ராக்டராக இவர் இருந்து வந்தார். ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற கட்டுமானப் பணிகளை இவரே மேற்கொண்டதாக தெரிகிறது. ஆனால், இதற்கான செலவுத் தொகையை கர்நாடகா ஊரக வளர்ச்சித் தறை அமைச்சர் ஈஸ்வரப்பா தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தனது பணத்தை தருவதற்கு 40 சதவீதம் கமிஷனை அமைச்சர் பி.எஸ். ஈஸ்வரப்பா கேட்பதாகவும், தர மறுத்தால் கொலை செய்து விடுவதாக தன்னை மிரட்டுவதாகவும் சந்தோஷ் பாட்டீல் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களிலும் இதுதொடர்பாக பேசி சந்தோஷ் பாட்டீல் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். இது, கர்நாடாகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், யாரும் எதிர்பாக்காதவிதமாக உடுப்பியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தோஷ் பாட்டீல் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அருகே இருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், தனது தற்கொலைக்கு அமைச்சர் ஈஸ்வரப்பாவும், அவரது உதவியாளர்களான பசவராஜ் மற்றும் ரமேஷும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் மீது உடுப்பி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சந்தோஷ் பாட்டீலை தற்கொலை தூண்டிய குற்றத்துக்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

ராஜினாமா பேச்சுக்கே இடமில்லை...

இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களை அமைச்சர் பி.எஸ். ஈஸ்வரப்பா இன்று சந்தித்தார். அப்போது அவர், "சந்தோஷ் பாட்டீல் எந்தவித ரசீதும் இல்லாமல் என்னிடம் பணத்தை கேட்டார். எனவேதான், அந்தப் பணத்தை நான் தரவில்லை. இந்த சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஒன்றை கேட்கிறேன். நீங்கள் அமைச்சராக இருந்தபோது, ரசீது இல்லாமல் கான்ட்ராக்டர் ஒருவர் பணம் கேட்டால் நீங்கள் கொடுத்திருப்பீர்களா? சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது. நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை" என ஈஸ்வரப்பா கூறினார்.