இந்தியா

கர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்

கர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்

webteam

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை, 25 நாட்களுக்குப் பின்  இன்று விரிவாக்கப்பட்டது. 17 அமைச்சர்கள் பதவியேற்றனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, ‌பாஜகச் சேர்ந்த எடியூரப்பா, ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதலமைச்சர் ஆனார். முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவு, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால், அமைச்சரவை விரிவாக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து 2 நாள்களுக்கு முன் டெல்லி சென்ற முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்து, அமைச்சரவையை இறுதி செய்திருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதன்படி, முதல்கட்டமாக, இன்று 17 அமைச்சர்கள் பதவியேற்றனர்.  ஸ்ரீகோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயண், லக்‌ஷ்மண் சங்கப்பா சாவடி, ஈஸ்வரப்பா, அசோகா, ஜகதீஷ் ஷட்டர், ஸ்ரீராமுலு, சுரேஷ் குமார், சோமன்னா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, கோட்டா ஸ்ரீவாஸ் பூஜாரி, மதுஸ்வாமி, சந்திரகாந்த கவுடா, நாகேஷ், பிரபு சவுகான், ஜோலி சசிகலா அன்னா சாகேப் ஆகிய 17 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷூம் அமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பா முதலமைச்சராகப் பதவியேற்று 25 நாட்களுக்குப் பிறகு அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.