இந்தியா

புதுச்சேரி: பாஜகவில் இணைந்த காரைக்கால் பெண் தாதா, சீர்காழி ரவுடி

புதுச்சேரி: பாஜகவில் இணைந்த காரைக்கால் பெண் தாதா, சீர்காழி ரவுடி

EllusamyKarthik

புதுச்சேரி யூனியன் பிரதேச பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர் காரைக்காலை சேர்ந்த பெண் தாதா எழிலரசி மற்றும் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா. 

புதுச்சேரி - காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் சாராய வியாபாரி ராமு. இவருக்கு வினோதா மற்றும் எழிலரசி என்ற இரண்டு மனைவிகள். கடந்த 2013இல் ராமு கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு ராமுவின் முதல் மனைவி வினோதாவும், அப்போதைய புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமாரும் தான் காரணம் என கூறப்பட்டது. இந்த கொலை வழக்கில் கைதான அய்யப்பன் காரைக்காலில் படுகொலை செய்யப்பட்டார். ராமுவின் முதல் மனைவி  வினோதா கடந்த 2015இல் சீர்காழியில் படுகொலை செய்யப்பட்டார். 2017இல் காரைக்காலில் வி.எம்.சி. சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார். எழிலரசி தலைமையிலான கூலிப்படைதான் இந்த கொலைகளை செய்ததாக வழக்கு பதிந்து, விசாரணையும் நடைபெற்று வருகிறது. 2018 மற்றும் 2020இல் எழிலரசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் எஸ்.ஆர்.ஆர் பேரவை நிறுவனராகவும், சமூக சேவை அமைப்பை தொடங்கியும் அவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது காரைக்காலின் பெண் தாதா என அழைக்கபட்ட எழிலரசி புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். அதே போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பிரபல ரவுடியும், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவருமான ரவுடி சத்யாவும் தன்னை பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.

பெண் தாதா மற்றும் ரவுடி இணைப்பு குறித்து பா.ஜ.க கட்சி நிர்வாகிகளிடம் பேசிய போது மற்ற கட்சிகளில் ரவுடிகள் மற்றும் கொலை குற்றம் சுமத்தபட்டவர்கள் இல்லையா? எனவும் அனைத்து கட்சியிலும் தற்போது பொறுப்புகளில் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களா? எனவும் பதில் கேள்வி எழுப்புகின்றனர்.