சத்தம், இறைச்சல், ஒலி... இந்த வார்த்தகைகள் குறிக்கும் பொருள் ஒன்றுதான் என்றாலும் அதன் டெஸிபெலின் அளவு அதிகரிக்கும் பொழுது நமக்கு எரிச்சலையும் தொந்தரவையும் அது ஏற்படுத்திவிடுகிறது.
நமது காதுகள், குறிப்பிட்ட அளவு டெஸிபெல் ஒலியை கேட்கும் திறன் வாய்ந்தது மட்டுமே. அந்த அளவைவிட குறைந்த அளவு அல்லது அதிகப்படியான சத்தங்கள், நம் காதுகளுக்கு கேட்காது. இதில் மிகக்குறைந்த அளவு சத்தமானது, உயிருக்கு ஆபத்தாவதில்லை. ஆனால், அதீத சத்தம்... எப்போதும் ஆபத்தையே கொண்டுவருகின்றன. அதனால்தான் திருமண நிகழ்ச்சியின் போது அல்லது பொது நிகழ்வில்கூட ஒலிப்பெருக்கியின் அருகில் நாம் அமரமாட்டோம். காரணம் அதன் ஒலி நம் மூளையை மட்டுமின்று நமது இதயத்தையும் பாதித்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அப்படித்தான் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவில் பண்ணூரை அடுத்த திருபரங்கோட்டூர் ஊராட்சியில் உள்ள கல்லிகண்டி மொயிலோத் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கடந்தவாரம் திருமணவிழா ஒன்று நடந்துள்ளது. அவ்விழாவில் மணமகனை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது ஒரு குழுவினர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடியுள்ளனர். அவர்களது கொண்டாட்டம் அப்பகுதியினருக்கு கடும் தொந்தரவை கொடுத்துள்ளது.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து 18 நாட்களாகிய குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த இரைச்சலும், வெடிச்சத்தமும் அந்தப் பிஞ்சுக் குழந்தையை தாக்கியுள்ளது. இதனால் அக்குழந்தை உடல் பாதிப்படைந்துள்ளது. உடனடியாக குழந்தையின் பெற்றோர், குழந்தையை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மணமக்கள் அழைப்பின்போதெல்லாம் அப்பகுதியில் பட்டாசு வெடிப்பதும் சத்தம் போடுவதும் வாடிக்கையாக இருப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மணமக்கள், கொண்டாட்டத்தை வெடியில்லாமல் கொண்டாடினால் எல்லோர் மனமும் நிறையும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதை அங்கிருப்பவர்கள் செய்கிறார்களோ இல்லையோ... நாம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு செய்யலாமே!!!