கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால், கடந்த மார்ச் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளானது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நாளுக்குநாள் புது தகவல்கள் வெளியாகின. தவிர, மாநில அரசியலிலும் ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரம் புயலைக் கிளப்பியது. இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கூறி, அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை ரன்யா ராவ், ரூ.38 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு பெரிய ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடிகையின் தங்கக் கடத்தல் வழக்கில் 3வது நபராக வியாபாரி சாஹில் ஜெயின் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடைய ரிமாண்ட் நகல் என்டிடிவிக்கு கிடைத்துள்ளது.
அதன்பேரில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சாஹிலும் ரன்யா ராவும் துபாயிலிருந்து தங்கத்தை கடத்தியது மட்டுமல்லாமல், ஹவாலா வழிகளில் பணத்தை மாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரன்யா ராவ் தவிர, அவரது நெருங்கிய உதவியாளர் தருண் ராஜு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் இரண்டாவது நபராகச் சேர்க்கப்பட்டு உள்ளார். இதில் சாஹில் ஜெயின், கடத்தப்பட்ட தங்கத்தை அப்புறப்படுத்த உதவியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
ரிமாண்ட் பிரதியின்படி, பிப்ரவரியில் துபாய்க்கு ரூ.11.8 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்கத்தையும், ரூ.11.25 கோடி மதிப்புள்ள ஹவாலா பணத்தையும் அப்புறப்படுத்த ரன்யா ராவுக்கு உதவியதாகவும் சாஹில் புலனாய்வாளர்களிடம் கூறியுள்ளார். தவிர, பெங்களூருக்கு ரூ.55 லட்சம் மதிப்புள்ள ஹவாலா பணத்தை மாற்றவும் ரன்யா ராவுக்கு உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில், துபாய்க்கும் பெங்களூருக்கும் இடையில் சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ள மொத்தம் 50 கிலோ தங்கத்தையும், ரூ.38 கோடி மதிப்பிலான ஹவாலா பணத்தையும் அப்புறப்படுத்த சாஹில், ரன்யா ராவுக்கு உதவியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றிற்கும் ரூ.55,000 கமிஷன் பெற்றதாக அவர் கூறியுள்ளதாக விசாரணைக் குறிப்பு தெரிவிக்கிறது.