ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனின் மனுவை, பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதன் பேரில் ரேணுகாசாமி என்ற ரசிகர், கன்னட நடிகர் தர்ஷனின் ஆட்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதன் பேரில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தன்னை பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையிலிருந்து பெல்லாரி சிறைக்கு மாற்ற வேண்டும் என கன்னட நடிகர் தர்ஷன் கோரிக்கை வைத்திருந்தார். தற்போது அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இதுகுறித்த விசாரணையின்போது, "கடந்த 30 நாட்களாகச் சூரியனைப் பார்க்கவில்லை. தனது கைகள் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகையால், எனக்கு விஷம் கொடுத்துவிடுங்கள்" என்று நீதிபதியிடம் தர்ஷன் கோரிக்கை வைத்துள்ளார். ”இதுபோன்ற செயல்களைச் செய்ய முடியாது. அது சாத்தியமில்லை" என்று நீதிபதி அறிவுரை கூறியதுடன் அவரை எச்சரித்துமுள்ளார்.
முன்னதாக கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு முதலில் 2024 டிசம்பரில் ஜாமீன் வழங்கியது. ஆனால் சாட்சிகளை சேதப்படுத்துவது குறித்த கடுமையான கவலைகளைக் காரணம் காட்டி, காவலில் அவருக்கு எந்தச் சிறப்பு வசதியும் வழங்கப்படக்கூடாது என்று உத்தரவிட்டு, ஆகஸ்ட் 14, 2025 அன்று உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. பின்னர் தர்ஷன் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.