நடிகர் தர்ஷன் எக்ஸ் தளம்
இந்தியா

ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கு.. நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்!

ரசிகர் ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், முதுகு வலியால் அவதிப்பட்ட சூழ்நிலையில், அறுவைசிகிச்சை செய்துகொள்ள ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து, அக்டோபர் 30 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம், அவருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் ஆறு வாரங்கள் ஜாமீன் வழங்கியது. ”தர்ஷனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் மற்றும் அவரது உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அவர் விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், அவர் தனது அறுவைச்சிகிச்சை தேதி, திட்டமிடப்பட்ட சிகிச்சை மற்றும் பின்தொடர்தல் பராமரிப்பு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.

கன்னட நடிகர் தர்ஷன்

இதையடுத்து, அவர் பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நிரந்தர ஜாமீன் கோரியும் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது கடந்த 9ஆம் தேதி தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு குறித்து இன்று அறிவிக்கப்பட்டது. இதில், நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவ்வழக்கில் சிலருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.