யுபிஎஸ்சி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் தம் உறவினர்கள் மற்றும் அவரது தோழிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்விற்கு 10.65 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதிலிருந்து 5 லட்சம் பேர் முதல்நிலை தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்விற்கு (மெயின்ஸ்) 10,468 பேர் தேர்வாகினர். பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நேர்காணல் தேர்விற்கு 1994 பேர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் அனைத்து கட்டங்களும் முடிவடைந்து இறுதி முடிவு வெளியாகியது. இந்தப் இறுதி பட்டியலில் 759 பேர் தேர்வாகியுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கனிஷாக் கடாரியா பிடித்துள்ளார். இவர் ஐஐடி பாம்பேயில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பயின்றவர். அதேபோல அகில இந்திய அளவில் 5 இடம் பிடித்த சுருஸ்தி ஜெயன்ந்த் தேஷ்முக் இந்தாண்டு தேர்வான பெண்களில் முதல் பெண்காக வந்துள்ளார். முதல் 25 இடங்கள் பிடித்தவர்களில் 15 பேர் ஆண்கள் மற்றும் 10 பேர் பெண்களாக உள்ளனர்.
முதலாம் இடம்பிடித்த கனிஷாக் கடாரியா, “நான் முதலிடம் பிடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. என்னுடைய பெற்றோர், அக்கா மற்றும் என் தோழி ஆகியோர்க்கு எனது மனமார்ந்த நன்றி. வருங்காலத்தில் சிறந்த அதிகாரியாக பணியாற்றுவேன்”எனக் கூறியுள்ளார்.