இந்தியா

‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்

webteam

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றனர். அப்போது பெரும்பாலும்  ‘தமிழ் வாழ்க’ என்ற கோஷங்கள் அதிகம் முழங்கின. 

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர்.

மேலும் ஸ்மிருதி இரானி, சதானந்த கவுடா உள்ளிட்ட அமைச்சர்களும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். பல்வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் நேற்று பதவியேற்றனர்.

இதையடுத்து இன்றும் பல்வேறு மாநில உறுப்பினர்கள் பதவியேற்றனர். தமிழக எம்.பிக்கள் தமிழிலேயே எம்.பிக்களாக பதவியேற்றனர். திமுக மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொள்ளும்போது இறுதியாக தமிழ் வாழ்க என முழக்கங்கள் எழுப்பினர். 

இதில் ஒரு எம்பி தமிழில் பதவி பிரமாணம் ஏற்று தமிழ் வாழ்க எனக்கூறும்போது எதிரே அமர்ந்திருந்த பாஜக எம்.பிக்கள் கூச்சலிட்டனர். மேலும் ‘பாரத் மாதாகி ஜே’ என முழக்கங்களை எழுப்பினர். 

இதேபோல் தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி தமிழில் பதவி பிரமாணம் ஏற்று இறுதியில் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என குறிப்பிட்டார். அப்போது பாஜக எம்பிக்கள் ஜெய்ஸ்ரீராம் என கூச்சலிட்டனர்.