இந்தியா

உ.பி. அரசு திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாவத் நியமனம்

JustinDurai
உத்தரப் பிரதேச அரசின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' என்கிற திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது மாநில அரசின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தினை மக்களிடம் கொண்டு செல்லும் விளம்பர தூதராக நடிகை கங்கனா நியமிக்கப்பட்டார். இச்சந்திப்பின்போது, ராமர் கோவிலின் பூமி பூஜையில் பயன்படுத்தப்பட்ட நாணயத்தை கங்கனாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசளித்தார்.
இதுகுறித்து கங்கனா ரனாவத் கூறுகையில், "'தேஜஸ்' படப்பிடிப்பின் ஒத்துழைப்புக்காக உத்தரபிரதேச அரசுக்கு நான் நன்றி தெரிவித்தேன். வரவிருக்கும் தேர்தல்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற நல்வாழ்த்துகள். மகாராஜ் ஜி உங்கள் ஆட்சி தொடரட்டும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.