இமாச்சலில் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்படி, அம்மாநிலத்தைச் சேர்ந்த மண்டி தொகுதியில், கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டன. இவற்றில் சிக்கி, 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மண்டி தொகுதி எம்.பியான கங்கனா ரணாவத்திடம், நிவாரணப் பணிகளுக்காக என்ன செய்யப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்தபடி பதிலளித்த அவர், தான் அமைச்சரவையில் இல்லை எனவும், நிவாரண பணிகளுக்கான தன்னிடம் நிதி தரப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். வெள்ள நிவாரண பணிகள் மாநில அரசின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார். இதனையடுத்து கங்கனாவை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் கட்சி, அவர் மக்கள் மீது அனுதாபம் இல்லாமல் இருப்பதாக விமர்சித்துள்ளது. அம்மாநில காங்கிரஸ் அமைச்சரான ஜகத் சிங் நேகி, கங்கனாவால் தனது பணிகளை செய்ய முடியாவிட்டால், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக கங்கனா பி.டி.ஐக்கு அளித்துள்ள பேட்டியில், “தங்கள் கடமைகளில் தோல்வியடைந்து, இமாச்சலப் பிரதேச மக்களை முற்றிலுமாக ஏமாற்றியவர்களுக்கு எனக்குப் போதிக்க எந்த உரிமையும் இல்லை. இங்குள்ள மக்கள் ஏற்கெனவே அவர்களால் ஏமாற்றமடைந்துள்ளனர். பொறுப்பேற்காதவர்களிடமிருந்து எனக்குப் பாடங்கள் தேவையில்லை. என் வேலையை எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.