இந்தியா

ம.பி.யில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

ம.பி.யில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 அமைச்சர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். மீதமுள்ள 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்கவில்லை. நேரில் ஆஜராகி தன்னிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் அறிவித்தார்.

ஆனால், பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள 16 எம்எல்ஏக்களும் சபாநாயகரையோ, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தையோ சந்திக்க விரும்பவில்லை என்று கூறி விட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் இரண்டு முறை உத்தரவிட்டாலும், அது சபாநாயகரின் முடிவு என்று கமல்நாத் கைவிரித்துவிட்டார்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையை முடிக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளது.