இந்தியா

மகாத்மா காந்தி குறித்து அவதூறு; கோட்சேவுக்கு புகழாரம் - மதத் தலைவர் மீது வழக்குப்பதிவு

JustinDurai
மகாத்மா காந்திக்கு எதிராகவும், நாதுராம் கோட்சேவை புகழ்ந்தும் பேசிய இந்து மதத் தலைவருக்கு எதிராக சத்தீஸ்கர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் நகரில் தர்மா சனாசத் எனும் 'மதங்களின் நாடாளுமன்றம்' நிகழ்ச்சி நடந்தது. இ்ந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவை சேர்ந்த காளிச்சரண் மகராஜ் என்ற துறவி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு தலை வணங்குகிறேன் என்று கூறிய அவர், முஸ்லிம் மதம் குறித்தும் கடுமையான சொற்களால் அவதூறு பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் மகாத்மா காந்தியை அவதூறாகப் பேசியது, இரு மதங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசியதாக காவல்துறையிடம் காங்கிரஸ் நிர்வாகி பிரமோத் துபே புகார் செய்தார். இந்தப் புகாரையடுத்து, காளிச்சரண் மீது திக்ராபாரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிசி 505(2) 294 ஆகிய பிரிவுகளில் காளிச்சரண் மீது முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
மகாத்மா காந்தி குறித்த காளிச்சரண் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்வினை ஆற்றியுள்ளார். “நீங்கள் என்னை சங்கிலியால் பிணைக்கலாம், என்னை சித்திரவதை செய்யலாம், இந்த உடலை அழிக்கலாம், ஆனால் என் எண்ணங்களை நீங்கள் சிறையில் அடைக்க முடியாது” என்று மகாத்மா காந்தியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.