இந்தியா

ஏதோ சில துண்டு சீட்டுகளை காட்டிவிட்டால் அது ஆதாரமா? - கபில் சிபல் வாதம் 

webteam

சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் 5 நாட்கள் காவலை நீட்டிக்கக்கோரி சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைதாகினார். அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் சிதம்பரத்தின் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது. 

இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரத்தை அளிக்குமாறு சிபிஐ தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 4 நாட்களாக சிதம்பரத்திடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு மின்னஞ்சல் பரிமாற்றங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆதாரங்களாக கிடைத்துள்ளதாகவும் அமலாக்கத்துறை விசாரணை சம்பந்தமாக சில ஆதாரங்களை தந்துள்ளன எனவும் தெரிவித்தது. 

அதற்கு ஏதோ சில துண்டு சீட்டுகளை காட்டிவிட்டு ஆதாரங்கள் என்கிறார்கள். உண்மையான ஆதாரங்கள் இருந்தால் காட்டலாமே என ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடி வருகிறார். மேலும் ஆதாரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் காண்பிக்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிபிஐயின் மனு மீதான உத்தரவு 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.