இந்தியா

“அதிகார போதைகளில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியாவால் வெளிவர முடியவில்லை” - கே.எஸ்.அழகிரி

“அதிகார போதைகளில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியாவால் வெளிவர முடியவில்லை” - கே.எஸ்.அழகிரி

webteam

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா வரலாற்று பிழையை செய்துள்ளார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச காங்கிரஸில் 18 ஆண்டுகளாக அங்கம் வகித்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது “ஜோதிராதித்ய சிந்தியா செய்தது பெருமைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்புடையது அல்ல.

ஒருவருக்கு கிடைத்த முதல்வர் பதவியை தட்டிப்பறிக்க நினைப்பது நல்லது அல்ல. சமீபத்தில் நின்ற தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியுற்றார். ஒரு மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் தான் இருக்க முடியும். இரண்டு முதலமைச்சரா இருக்க முடியும்? ஜனநாயகத்தின் அடிப்படையில் கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சட்டவிரோதமாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

மீசை முளைக்காத காலத்தில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரத்தில் இருந்துள்ளார். வாய்ப்புகளிலேயே வாழ்ந்துள்ளார். அதிகார போதைகளில் இருந்து அவரால் வெளிவர முடியவில்லை. அவருக்கு முதலமைச்சர் கனவு இருக்கிறது. ஆசை வெட்கமறியாது என்று சொல்வார்கள். இல்லையென்றால் அமித்ஷாவின் காரில் அவரால் ஒன்றாக பயணிக்க முடியுமா? அவரது குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள். மக்கள் என்ன நினைப்பார்கள். அவர் மகாராஜாவாக நின்றிருக்க வேண்டும். அமித்ஷாவின் காரில் ஏறுவது காங்கிரஸ்காரருக்கு இழுக்கு.

அதிருப்தி குறித்து அவரிடம் பலமுறை காங்கிரஸ் சமரசம் பேசியது. பாஜகவுக்கு சென்றால் முதலமைச்சராக இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் ஜோதிராதித்ய சிந்தியா இருக்கிறார். அவர் வரலாற்று பிழையை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.