இந்தியா

தடுப்பூசி வழங்குவதில் குஜராத்துக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது - கே.பாலகிருஷ்ணன்

Sinekadhara

டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து சென்னை தி. நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கருப்புக் கொடி ஏற்றினர். அதனை தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலாவதாக பேசிய மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்கக்கூட மோடியால் முடியவில்லை. 1 கோடிக்கு மேற்பட்டவர்கள் இந்த கொரானா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இறந்தவர்களை எரிக்க முடியாமல் கங்கை ஆற்றில் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் போதுமான அளவு மருந்து இல்லை; ஆக்சிஜன் இல்லை; எதுவுமே இல்லாத மோசமான ஆட்சியாகத்தான் மோடி அரசு உள்ளது என குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்காமல், குஜரத்திற்கு மட்டுமே வழங்கி வருகிறார். அவர் இந்தியாவிற்கு பிரதமரா அல்லது குஜரத்திற்கு பிரதமரா என கேள்வி எழுப்பினார்.

வேளாண் சட்டத்தினை ரத்து செய்ய நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்மானம் நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் கூறினார்,நிச்சயம் அவர் செய்வார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.