காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாரதிய ஜனதாவில் இணையக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அதிரடி திருப்பத்தின் பின்னணியில் குஜராத் மாநிலத்தின் பரோடா ராஜகுடும்பத்தை சேர்ந்த ஷுபாங்கிணி ராஜே கெயிக்வாட் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அரசியல் ரீதியாக தொடர்பு ஏற்படுத்தும் பாலமாக இவர் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பரோடாவை ஆண்ட கெயிக்வாட் ராஜகுடும்பத்தை சேர்ந்தவரான பிரியதர்ஷிணியைத்தான் ஜோதிராதித்ய சிந்தியா மணந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கெயிக்வாட் குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினரான ஷுபாங்கிணி ராஜே மீது பிரதமர் மோடி மிகுந்த நட்பும் மரியாதையும் வைத்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வதோதரா தொகுதியில் மோடி போட்டியிட்டபோது ஷுபாங்கிணி ராஜேதான் முன்மொழிந்தார். இந்த சூழலில்தான் மோடி மற்றும் சிந்தியா என இரு தரப்பிலும் தொடர்பில் இருந்த ஷுபாங்கிணி ராஜே இருவருக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.