காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அத்துடன் பாஜகவில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார். அவரை ஜே.பி.நட்டா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கட்சியில் இணைந்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு இடம்கொடுத்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய பிரதேச காங்கிரஸில் முக்கிய நபராக இடம்பெற்றிருந்த ஜோதிராதித்ய சிந்தியா, நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தப் பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமாக்களை இதுவரை சபாநாயகர் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தை தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில்அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.