இந்தியா

ம.பி.யில் பாஜக ஆட்சிக்கு 'வித்திட்டவர்' - புதிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா யார்?

நிவேதா ஜெகராஜா

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்க்கப்பட்டபடியே ஜோதிராதித்ய சிந்தியா இடம்பெற்றிருக்கிறார். கடந்த வருடம்தான் பாஜகவில் இவர் இணைந்தார். அதற்குள் அவருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து கிடைத்தற்கு பாஜகவுக்காக அவர் செய்த பெரிய உதவிகளே காரணம்.

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா? - மத்தியப் பிரதேசத்தின் குவாலியரை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராத்திய அரச குடும்பத்தின் வாரிசு இந்த ஜோதிராதித்ய சிந்தியா. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது குவாலியர் அரச சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. குவாலியர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜா ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையான மாதவ்ராவ் சிந்தியா. இப்போதும் முடிசூடா மன்னராக அந்தப் பகுதி மக்களால் மதிக்கப்பட்டு வருகிறார்.

ஜோதிராதித்ய சிந்தியாவின் அரசியல் என்ட்ரி, அவரின் 13 வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. இவரின் குடும்பமே அரசியல் பின்னணி கொண்டது என்றாலும், சிந்தியா தனது தந்தை மாதவ்ராவ் சிந்தியாவின் அடிச்சுவட்டையே பின்பற்றினார். அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியா 1971-ஆம் ஆண்டு தனது 26 வயதில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் குவாலியர் மற்றும் குணா தொகுதிகளில் இருந்து தொடர்ந்து 9 தேர்தல்களில் வெற்றி பெற்றார். இந்த தொகுதிகளில் தந்தையின் தேர்தல் வெற்றிக்காக, விவரம் தெரிய தொடங்கிய வயதிலேயே பிரச்சாரம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத்தியவர் ஜோதிராதித்ய சிந்தியா.

என்றாலும் தந்தை இறப்பின் பின்னரே நேரடி அரசியலில் களமிறங்கினார். 2001-ல் தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர், அடுத்த ஆண்டே நடைபெற்ற தேர்தலில் தங்கள் குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியான குணா தொகுதியில் இருந்து 4.5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றி அவரின் அரசியல் வாழ்க்கையே புரட்டிப்போட்டது. குவாலியரில் அவர்கள் குடும்பத்துக்கு இருந்த செல்வாக்கு போன்ற அடுத்த சில ஆண்டுகளில் அவரை மத்தியப் பிரதேச காங்கிரஸின் முகமாக மாற்றியது.

அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் கட்சியை மத்தியப் பிரதேசத்தில் கரைசேர்க்கும் கரங்களில் ஒன்றாக மாறினார் சிந்தியா. இதனால் 2007-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி., துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். 2009-ஆம் ஆண்டு மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக ஆனார். 2012-ஆம் ஆண்டு மின்சார துறை அமைச்சர் பல்வேறு பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தது காங்கிரஸ்.

இதனிடையேதான் கடந்த 2018 நவம்பரில் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தது. இந்தமுறையும் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலை உயர்த்தி பிடிக்க முக்கியப் பங்கு வகித்தார் சிந்தியா. தனது உழைப்பின் பயனாக இந்த முறை கட்சியிடம் இருந்து அவர் எதிர்பார்த்தது முதல்வர் பதவி. ஆனால், காங்கிரஸ் இந்த முறை அவரின் ஆசையை நிறைவேற்றவில்லை. முதல்வர் பதவியை கமல்நாத்துக்கு தாரைவார்த்தது காங்கிரஸ். இந்த அதிருப்தியுடன் சில நாட்கள் காங்கிரஸில் ஓட்டிய சிந்தியா, சமயம் பார்த்து காங்கிரஸை கவிழ்த்தார்.

கடந்த ஆண்டு மார்ச்சில் காங்கிரஸில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் பாஜக பக்கம் தன் விசுவாசத்தை திருப்பினார். அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக இருந்த 22 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய மத்தியப் பிரதேச அரசியல் ஆட்டம் கண்டது. காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. 2018-ல் ஆட்சியை இழந்த பாஜக சிந்தியாவின் தயவால் 2019-ல் ஆட்சிக்கட்டிலை தக்க வைத்துக்கொண்டது. முதல்வராக சிவராஜ் சிங் சௌகான் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். சிந்தியாவின் இந்த உதவிக்கு கைமாறாகத் தான் தற்போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக அவர் பதவியேற்றிருக்கிறார்.