இந்தியா

நாளை விடுதலையாகிறார் நீதிபதி கர்ணன்

webteam

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன் நாளை விடுவிக்கப்படுகிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த கர்ணன், பின்னர் கொல்கத்தா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். கொல்கத்தாவில் நீதிபதியாக பணியாற்றி வந்த அவர், உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் சக நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினார். அத்துடன் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார். இதையடுத்து கர்ணனுக்கு எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம், அவரது மனநிலையை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அதற்கு மறுத்த கர்ணன், மீண்டும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார்.

இதையடுத்து நீதித்துறை மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தலைமறைவான நீதிபதி கர்ணன், கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்ட கர்ணன், 6 மாதங்களுக்குப் பின் நாளை விடுதலை செய்யப்பட உள்ளார்.