இந்தியா

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

rajakannan

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

டெல்லி ‘ஜனநாயகத்தில் நீதித்துறையில் பங்கு’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் கரன் தாப்பர் உடன் நடந்த உரையாடலின் போது பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் அரசு தரும் எந்த விதமான பதவியையும் ஏற்கமாட்டேன் என்றும் உரையாடலின் போது நீதிபதி செல்லமேஸ்வர் கூறியுள்ளார்.

இந்த உரையாடலின் போது ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட அமர்வுக்கு வழக்கை ஒப்படைப்பது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிலும் நடந்தது என்று அவர் அதிர்ச்சியான தகவலை கூறினார். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முடிந்தும் ஒரு வருடத்திற்கு தீர்ப்பு வழங்கப்படாமல் தாமதித்தது ஏன்? அனைத்தும் முடிந்த பிறகு வழக்கின் தீர்ப்பு வெளியானதால் கிடைத்தது என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் நீதிபதி செல்லமேஸ்வர் எழுப்பினார். 

பொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளும் வெளியில் நடைபெறும் கூட்டங்களில் நீதிமன்ற வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்கமாட்டார்கள். நீதித்துறையின் மாண்பை காக்க வேண்டும், சட்டத்தை மக்கள் மதித்து நடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பொத்தம் பொதுவான கருத்துக்களையே கூறுவார்கள். ஆனால், முதன்முறையாக பணியில் உள்ள நீதிபதி செல்லமேஸ்வர் வழக்கு ஒன்றின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார். நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு அளித்து அனைவரையும் விடுதலை செய்தார். பின்னர் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது.