உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் நேற்றுடன் (மே 13) நிறைவடைந்ததை அடுத்து, தனது பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பிறகு, தலைமை நீதிபதி கவாய்க்கு குடியரசுத் தலைவர் முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவும் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நவம்பர் 24, 1960 அன்று பிறந்த நீதிபதி கவாய், 1985இல் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். 1987இல் மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் அட்வகேட் ஜெனரலும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான மறைந்த ராஜா எஸ்.போன்சாலேவுடன் ஆரம்பத்தில் பணியாற்றினார். நீதிபதி கவாய் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டத்தில் கவனம் செலுத்தினார். ஆகஸ்ட் 1992இல், அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர், 2000ஆம் ஆண்டில் அதே அமர்வில் அரசு வழக்கறிஞராகவும் ஆனார். நீதிபதி கவாய் நவம்பர் 14, 2003 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் 2005இல் நிரந்தர நீதிபதியானார். மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையிலும், நாக்பூர், அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் பணியாற்றினார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவர் பதவி வகித்தபோது பல முக்கிய வழக்குகளுக்குத் தீர்ப்பு அளித்தவர். 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு வழக்கு, தேர்தல் பத்திரத் திட்டம் ஆகியவை அதில் அடக்கம். தவிர, அவர் சுமார் 300 தீர்ப்புகளை எழுதியுள்ளார், அவற்றில் பல அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்புகள் ஆகும். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு நாட்டின் உயர் சட்டப் பதவியை வகிக்கும் இரண்டாவது பட்டியலின தலைமை நீதிபதி கவாய் ஆவார். தலைமை நீதிபதி கவாய் அவர்களின் தந்தை ஆர்.எஸ். கவாய் ஒரு சமூக ஆர்வலர் ஆவார். அவர் மூன்று மாநிலங்களின் ஆளுநராகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். ஆர்.எஸ்.கவாய் இந்திய குடியரசுக் கட்சியை (கவாய்) நிறுவியவரும் ஆவார்.