சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் வழக்கை விசாரிப்பதில் இருந்து தலைமை நீதிபதி விலகிய நிலையில் மற் றொரு நீதிபதியும் விலகியுள்ளார்.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு வரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால் மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பதவி ஏற்றார். பின்னர் அவரை தீயணைப்பு மற்றும் ஊர்க் காவல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவையும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியது.
இந்நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமித்ததை எதிர்த்து தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் விலகியதாக நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித் திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிக்ரி அமர்வு முன்பு இன்று வரும் என்று கூறப்பட்ட நிலையில் நீதிபதி சிக்ரியும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துள்ளார்.