மகாராஷ்டிராவில் உள்ள பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்க அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.
துரித உணவுகளால் மாணவர்களுக்கு உடல் பருமன் உண்டாவதால் அம்மாநில அரசு இந்த தடையை விதித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார மையம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், வைட்டமின் குறைந்த துரித உணவுகளில் கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதால் உடல் பருமன் மற்றும் உடல் சம்மந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, பள்ளி மாணவர்களுக்கு சாதம், சப்பாத்தி, காய்கறிகள், கோதுமை உப்புமா, இட்லி, வடை, இளநீர் உள்ளிட்ட சத்து நிறைந்த இயற்கை உணவுகள் தர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இடைவேளையின்போது, துரித உணவுகளோ அல்லது முன்னதாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளோ விற்பனை செய்ய பள்ளி உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.