கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. கனடாவின் டிஜிட்டல் சேவை வரி விதிப்பு என்பது அமெரிக்கா மீதான அப்பட்டமான வரி தாக்குதல் என்றும் விமர்சனம்.
வியட்நாமில் தரையிறங்கும்போது இரண்டு விமானங்கள் மோதி விபத்து. நல்வாய்ப்பாக 386 பயணிகள் உயிர்தப்பிய நிலையில் விசாரணைக்கு உத்தரவு.
ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல். காயம், மயக்கம் காரணமாக 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
அரக்கோணம் அருகே தண்டவாள விரிசலை கவனித்து, பயணிகள் ரயிலை சாதுரியமாக நிறுத்திய ஓட்டுநரால் விபத்து தவிர்ப்பு. சீரமைப்புப் பணிகள் முடிந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கம்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு. ஜூலை 7ஆம் தேதி கோவையில் இருந்து பயணத்தை தொடங்குவதாக கட்சித் தலைமை தகவல்.
தமிழகத்தில் 2026இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியே அமையும் என அமித் ஷா மீண்டும் பேச்சு. கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக, பாஜக தலைவர்கள் இடையே காரசார விவாதம்.
புதுச்சேரியில் பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார், மூன்று நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பு. காலியாக உள்ள நியமன உறுப்பினர்கள் பதவி வரும் 1ஆம் தேதிக்குள் நிரப்பப்படும் என சபாநாயகர் செல்வம் அறிவிப்பு.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சாய் சரவணக்குமாருக்கு பாஜக மாநிலத் தலைவர் பதவி வழங்கக்கோரி ஆதரவாளர்கள் சாலை மறியல். புதுச்சேரியில் பாஜகவை வளர்த்துவிட்டவருக்கே மரியாதை கொடுக்கப்படவில்லை என ஆதங்கம்.
விவசாயிகள் பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டுவர தமிழக அரசு வேண்டுகோள். வேளாண் அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு, பருத்திக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்திட அறிவுறுத்தல்.
ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணையும் கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. தாமதமான அங்கீகாரமே என்றும் எக்ஸ்தளத்தில் பதிவு.
மாணவர்கள் சாதிக் கயிறுகளைக் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும். பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை..
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என கணிப்பு.