இந்தியா

''நீதிமன்றங்களை சாமான்ய மக்களால் எளிதாக நாட முடியவில்லை'' ராம்நாத் கோவிந்த் கவலை

jagadeesh

நீதித்துறை நடைமுறைகள் சாமான்ய மக்களை எளிதாக சென்றடையவில்லை என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், நீதித்துறை நடைமுறைகள் ஏழைகளுக்கு மிகுந்த செலவினம் கொண்டதாக இருக்கிறது என்றும், பல காரணங்களால் நீதித்துறை நடவடிக்கைகள் சாமான்ய மக்களை சென்றடைவதில்லை என்றும் கவலை தெரிவித்தார். 

குறிப்பாக உயர் நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் சாமான்ய மக்களின் மனுக்கள் சென்றடைவது என்பது சாத்தியமில்லாததாகி வருகிறது என்றும் தெரிவித்தார். ஏழை, செல்வந்தன் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் நீதி கிடைக்க செய்வதற்கு நீதித்துறையில் இருப்பவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், நீதித் துறை செலவினங்கள் குறித்து மகாத்மா காந்தியும் கவலை தெரிவித்திருந்ததை நினைவுக் கூர்ந்தார்.

காந்தியின் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, ஏழைகளுக்கு உதவ அனைவரும் முன் வரவேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தினார்.