இந்தியா

2024 வரை பாஜக தலைவராக நீடிக்கும் ஜெ.பி. நட்டா? -மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக திட்டம்

webteam

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜெகத் பிரகாஷ் நட்டா, வருகிற 2024-ம் ஆண்டு வரை அந்தப் பதவியிலேயே தொடர, பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஜெகத் பிரகாஷ் நட்டாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் அவர் அந்தப் பதவியில் தொடர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கருதுவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெகத் பிரகாஷ் நட்டாவின் தலைமை செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாலும் அடுத்தடுத்து பல தேர்தல்கள் நடைபெற உள்ளதாலும், இப்போதைக்கு தலைமை மாற்றம் வேண்டாம் என்பது மூத்த பாஜக தலைவர்களின் கருத்து. ஜெகத் பிரகாஷ் நட்டா, கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் பாஜக தேசிய தலைவராக பொறுப்பாற்றி வருகிறார்.

முன்னதாக 2019-ம் வருடம் ஜூன் மாதத்தில் நட்டா செயல் தலைவராக பொறுப்பேற்றார். அப்போது தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, 2019 வருட மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த போது, உள்துறை அமைச்சராக பதவி ஏற்றார். "ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே" என்கிற அடிப்படையில் அமித் ஷா பாஜகவின் தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்தப் பதவிக்கு ஜெகத் பிரகாஷ் நட்டா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் 2023-ம் வருடம் ஜனவரி மாதத்துடன் முடிவடையாமல் தொடர வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் 2024-க்கு முன்னதாக நடைபெற உள்ளன. அதைத்தொடர்ந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அடுத்த மக்களவைத் தேர்தல் 2024-ம் வருடத்தில் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்த மக்களவைத் தேர்தலில் கடும் போட்டியை அளிக்க வேண்டும் என பல்வேறு திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், வரவுள்ள தேர்தல்களை எதிர்கொள்வது பாஜகவுக்கு சுலபமான காரியமாக கருதக்கூடாது என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் எனவும் மாநிலங்களிலும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் எனவும் பாஜக தலைவர்கள் பல்வேறு திட்டங்களை தயார் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் பாஜகவுக்கு தற்போது மக்களவை உறுப்பினர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் வெற்றி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள்.

ஒருவேளை பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் 2019-ம் ஆண்டில் கிடைத்த அளவுக்கு பாஜக வெற்றி பெறாவிட்டாலும், அதை சரிக்கட்டும் அளவுக்கு பிற மாநிலங்களிலே மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது பாஜக தலைவர்களின் வியூகம்.

ஆகவே இப்போது கட்சிக்கு புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டாம் எனவும், ஜெகத் பிரகாஷ் நட்டா அந்தப் பதவியில் 2024 மக்களவைத் தேர்தல் வரை தொடர வேண்டும் எனவும் கட்சியின் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மன்ற குழு விரைவிலேயே இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- கணபதி சுப்ரமணியம்